27/06/2017
கட்டுமானத்தின் பிரதான அங்கமாக விளங்கும் சுவர் எழுப்பும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* செங்கல்களை ஒரு அடி உயரத்திற்கு மேலே எழுப்பும்போது கீழ் உள்ள பகுதிகள் நேராக இருக்கின்றதா? என்பதை மட்டப்பலகை கொண்டு கொத்தனார்கள் அடிக்கடி சரி செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
* பூச்சு வேலைக்கு மட்டுமின்றி செங்கல் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் மணலையும் சலித்த பிறகே பயன்படுத்த வேண்டும். மணல் பார்ப்பதற்கு தூசு இன்றி தோற்றமளித்தாலும் அதை அப்படியே பயன்படுத்திவிடக்கூடாது.
* செங்கல்கள் அனைத்தும் ஒரே நீளம், அகலம் உடையதாக இருக்க வேண்டும். மேலும் மேடு, பள்ளமாக இருக்கக்கூடாது. செங்கலின் நுனிப்பகுதி அதிகமாக சிதிலமடைந்தும் இருக்கக்கூடாது.
* செங்கல்களில் அதனை தயாரித்தவர்களின் பெயர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதியை மேல்நோக்கியே வைத்து சுவர் எழுப்ப வேண்டும். இல்லாவிட்டால் சிமெண்ட் கலவை செங்கற்களுக்குள் சரியாக பதியாமல் இருந்துவிடக்கூடும். அது பின்னாளில் விரிசல் பிரச்சினைக்கு வித்திடக்கூடும்.
* கட்டுமானத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே மூச்சில் சுவர்களை எழுப்பிவிடக்கூடாது. ஒரு நாளைக்கு ஐந்து அடி உயரத்துக்கு மிகாமல் சுவர் கட்டுமானம் இருக்க வேண்டும். அப்போதுதான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்கள், சிமெண்ட் கலவையுடன் இணைந்து நன்றாக இறுகுவதற்கு ஏதுவாகும். சுவரும் வலிமையுடன் அமையும்.
* தினமும் சுவர் கட்டுமானத்தை எழுப்புவதற்கு முன்பு ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் சுவர்களுக்கு காலையிலும், மாலையிலும் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் சுவர்களில் வெடிப்புகள், விரிசல்கள் ஏற்படக்கூடும்.
* சிமெண்டு கலவையை தரையில் தயாரிக்கக்கூடாது. சிமெண்ட் ரோடு அல்லது செங்கல்களை பரப்பி அவற்றின் மேல் மணல், சிமெண்டு, தண்ணீர் கலந்து கலவை தயாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தரையினுள் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படும் என்பதோடு அதில் கலந்திருக்கும் சிமெண்டும் வீணாகி கட்டுமானத்தின் வலிமையை குறைத்துவிடக்கூடும்.
* சுவர் எழுப்புவதற்கு முன்பு அஸ்திவாரத்தின் மேல் மட்டத்தில் செங்கல்களுக்கு இடையில் கான்கிரீட் கலவையை நிரப்புவது நல்லது. அது அஸ்திவாரத்திற்கும், சுவர் கட்டுமானத்திற்கும் வலிமை சேர்க்கும்.
நன்றி -தந்தி